Sunday, October 28, 2012

ஆஜீத் காலிக் -- பட்டம் வென்றான் எங்கள் இதயம் கொண்டான்... (Aajeedh Khalique)

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 - ஆஜீத் காலிக்


நாங்க எதிர்பார்த்துதான் இருந்தோம், இருப்பினும் உள்ளூர ஒரு பதட்டம்... என்ன நடக்கும்? எல்லாரும் வாக்களித்திருப்பார்களா? எங்கள் ஆஜித் வென்று விடுவானா? என ஒரு பதட்டம் கடந்த வாரம் முழுவதும் ஒரு பாதிப்பாய் இருந்தது... கடைசியா அந்த நாளூம் வந்தது, “”வந்தே மாதரம்” நீ முழங்கியதும்  உடலெல்லாம் உற்சாகம் கரை புரண்டோடியது... சந்தோச கண்ணீரே” என நீ பாடியதும், பார்த்தவர் அனைவருக்கும் சந்தோசக் கண்ணீர் வந்தது உண்மை.... பெரும் மகிழ்ச்சி... வழக்கம்போல பலர் எழுந்து நின்று வாழ்த்தினர்... 



விஜய் டிவி நேரடி ஒளிபரப்பு என நிகழ்ச்சி  தொடர்ந்து சென்று கொண்டிருந்தாலும், ஃபேஸ்புக்கில் ரசிகர்கள் உன் வெற்றியை அறிவித்த போது, என்னவென்று புரியாமல் சற்று குழம்பி போயிருந்தோம்... இறுதியாக நீ வென்ற செய்தி கேட்ட போது எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தோம்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் நிகழ்ச்சிக்கு வருவார் என எதிர்பார்த்திருக்கவில்லை... அனைவருக்கும் பிடித்த ஏ ஆர் ரகுமானின் கையாலேயே நீ பட்டம் பெற்றது மட்டற்ற மகிழ்ச்சி... இசை உலகமே வியந்து பார்க்கும் ஏ ஆர் ரகுமான் உன்னை வியந்து பாராட்டியது உன் இசைக்கும், உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி.  இசைப்புயலின் வாயால் ”Born Superstar” பட்டம் பெற்றதும் உனக்கு கிடைத்த மாபெரும் வெற்றி. மகிழ்ச்சி.



கடுமையான போட்டிகளைத் தாண்டி, வென்றெடுத்தாய் பட்டத்தை... பட்டம் வெல்லத் தகுதியானவன் நீ... ஆனால் இத்தனை ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து எங்கள் அனைவரையும் உன் இசையால் கட்டிப் போட நீ பட்ட பாடு உனக்கும் இறைவனுக்கும் மட்டும்தான் தெரியும். உன் கடின உழைப்பும் இறை அருளும் இன்றி இது ஏதும் நடந்தேறியிருக்காது....




ஆஜீத் காலீக்...
எங்கள் இதயம் கவர்ந்தவனே...

இனிதான் உனக்கு மேலும் கவனம் தேவை...
இன்னும் எத்தனையோ தூரம் நீ போக வேண்டியிருக்கிறது... 
இசை மட்டுமின்றி பல களம் நீ காண வேண்டும்... 
பல மேடைகள் உன்னை வரவேற்க காத்திருக்கும்... 
இதே உழைப்பும், கவனமும் இருந்தால்தான் அனைத்தும் உன் வசப்படும்.
புகழ் உன்னைச் சுற்றி வரும் இந்த வேளையில் 
இப்பொழுது போல் எப்பொழுதும் பணிவாய் தொடர்வாய்... 

சூப்பர் சிங்கர் மேடையில் வெற்றி கண்ட ப்ரகதி, யாழினி, சுகன்யா, கௌதம் மற்றும் பங்கேற்ற அனைத்து குழந்தைகளுக்கும் வாழ்த்துகள்....



இப்படி அருமையான கலைஞர்களை வெளிக்கொண்டு வரும் விஜய் டிவிக்கு நன்றி.


இனிய இசையே - எங்கள்...
இதயம் கவர்ந்தவனே...
பட்டத்திற்கு தகுதியானவனே...
பிறவிக் கலைஞனே...
இன்னும் நீ வெற்றி பெற
வாழ்த்துகள் ஆஜீத்...
இறைவனுக்கு நன்றி...

இப்படிக்கு,
உன் ரசிகன்.


(நன்றி: படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து)

Sunday, October 21, 2012

Eid in Dubai



அனைவருக்கும் வணக்கம்,

துபாயின் பல இடங்களில் இது போன்ற வண்ண விளக்குகள் Eid in Dubai என அறிவித்துக் கொண்டிருக்கின்றன. 




துபாய் அரசாங்கத்தால், 2008 ஆண்டு முதல் தொடங்கப்பட்ட விழா Eid in Dubai ஆகும். Eid Al Fitr மற்றும் Eid Al Adha விழாக்களைக் கொண்டாடும் விதமாக Eid in Dubai தொடங்கப்பட்டது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் இங்கு வசிக்கிறார்கள், மேலும் ஆண்டு முழுவதும் பல நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். ஆகவே,  குழந்தைகளும் , துபாய் வாழ் மக்களும், நாடுகள் வேறுபாடின்றி அனைவரும், அனைத்து வயதினரும் மகிழ்ச்சியுடன் இந்த விழாக்களைக் கொண்டாட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 

Eid in Dubai விழாவின் ஒரு பகுதியாக துபாய் க்ரீக் பகுதியில் இரவு சரியாக 9 மணிக்கு கண்கவரும் வானவேடிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன்.


நம்ம ஊருல திருவிழாக் காலத்தில் என்னென்ன காண்போமோ, என்னென்ன வாங்கி உண்போமோ, அத்தனையும் இங்கும் கிடைக்கும்.... குழந்தைகளுடன் மாலை வேளையில் இந்த துபாய் க்ரீக் பகுதிக்கு சென்றால் நேரம் போவதே தெரியாது...

பஞ்சு மிட்டாய் சாப்பிடுறீங்களா...





மக்காச்சோளம்...



பலூன் வாங்கலாம்....


குழந்தைகள் விளையாட ரப்பர் பலூன் திடல்



இது மட்டுமில்லாமல் பல நாடுகளைச் சேர்ந்த கலைக்குழுவினரின் கலாச்சார ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.



கென்யாவைச் சேர்ந்தவர்களின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள்:



துபாயின் வெப்பநிலை மாறி குளிர தொடங்கி விட்டது,  பக்ரீத் பண்டிகையை ஒட்டி நீண்ட விடுமுறை வரப் போகிற மகிழ்ச்சியில் அனைவரும் காத்திருக்கின்றனர். இன்னும் அடுத்தடுத்து துபாயில் பல நிகழ்ச்சிகள் வர இருக்கின்றன. Dubai Global Village இன்று தொடங்கிவிட்டது.... முதல் நாள் அனுமதி இலவசம்.

Dubai Shopping Festival, Global Village ஆகியவற்றைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

படங்கள் அனைத்தும் நான் எடுத்தவை... மேலும் படங்களைக் காண இங்கே செல்லவும்...

அனைவருக்கும் நன்றி.

Sunday, October 7, 2012

ஆஜீத் காலிக் -- நீ வென்று விட்டாய்.... (Aajeedh Khalique)


ஆஜீத் காலிக் :




இசை உலகம் உன்னைத் தோளில் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறது.... 
எத்தனையோ ஆண்டு கால இசை அனுபவம் உள்ளவர்களெல்லாம் உன் பாட்டுக்கு எழுந்து நிற்கிறார்கள்.... 
உன் பாட்டிற்கு மதிப்பெண் இட வந்தவர்கள், உன் தேன் இசையில் மயங்கிக் கிடக்கிறார்கள்...
கருத்துச் சொல்ல சொற்களின்றி அவர்களின் குரல் தழுதழுக்கிறது... 
ஆனந்தக் கண்ணீரில் நனைகிறார்கள்

ஆஜீத் காலீக்: 

எத்தனையோ பாட்டுகளை நீ பாடி விட்டாய் இந்த மேடையில்... 
எந்தப் பாட்டிலும் உன் இசை எங்களை ஏமாற்றவில்லை... 
ஏங்க வைக்கிறாய்...
உருக வைக்கிறாய்...
சிலிர்க்க வைக்கிறாய்... 
மயங்கி கிடக்கிறோம்... 

எத்தனை முறை உன் பாட்டைக் கேட்டாலும் 
எங்களை கைகள் தானாகவே தட்டுகின்றன.... 
உன் இசை எங்கள் இதயம் தொட்டு இலகுவாக்குகிறது... 



பல பாடல்கள் ...
எத்தனை கடினமான பாடல்களாகட்டும்...
மிக எளிமையாக பாடி அசத்தி விடுகிறாய்...

மனப்பாடம் செய்து பாடலை பாடாமல்
மனதில் இறுத்தி உணர்வுகளைக் கொட்டி
எங்களை உன் இசையால் கட்டி வைக்கிறாய்...

உன் குரலில் உணர்ச்சிகளை வடிக்கிறாய்...
உன் கண்களில் பல காட்சிகளைக் காட்டுகிறாய்...
கட்டுப்பட்டுக் கிடக்கிறோம்... இன்னும்
காத்திருக்கிறோம்... 



தொடர்ந்து தா ஆஜீத்... 
எங்களை இதயங்களை இலகுவாக்கு...

மாசமா ஆறு மாசமா ஏங்கித் தவிச்சேன் 
என தொடங்கினாய் உன் வருகையை... 
அன்று முதல் உன் இசைக்காக 
ஏங்கிக் தவிக்கிறொம்
உலகில் பல கோடி ரசிகர்கள்...



முதல் வரியிலேயே எங்கள்
அனைவரையும் கொள்ளை கொண்டாய்...

உன் பாட்டில் உருகிப்போனார்கள்
உலகம் முழுவதும் உன் ரசிகர்கள்
அந்த ஒரு பாட்டு போதும் 
உன் திறமையைப் பறை சாற்ற...



நீ பாடிய அத்தனை பாடல்களையும் 
ஒவ்வொரு வரிக்கும் நீ காட்டிய அழகையும்
என்னால் எழுத்தில் வடிக்க இயலாது...
கண்ணால் கண்டு 
காது குளிரக் கேட்டு
சொக்கிப் போக வேண்டும்...

ஐயோ ஆஜீத்...அது போதும்... 
இதுவரை உன் குரல் கேட்காதவர்கள்...
ஆராமலே கேட்டால் 
உறுதியாகச் சொல்கிறேன் 
உன் ரசிகன் ஆவார்கள்...



தேன் தடவி வரும் உன் குரல்
எங்கள் இதயத்தில் என்றும் இனிக்கிறது...

சூப்பர் சிங்கர் ஜீனியர் 3 
பட்டம் நீ வென்றாலும் வெல்லாவிட்டாலும்
என்னைப் போன்ற எத்தனையோ கோடி ரசிகர்களின் இதயத்தை 
எப்போதோ வென்று விட்டாய்...



வாழ்க் ஆஜீத்
இறைவா அருள் செய்வாய்...


ஆஜீத்தின் பாடல்களை பார்த்துக் கேட்டு ரசிக்க, நனைய, உருக இங்கே சென்று பாருங்கள்.

நன்றி.