Friday, August 31, 2012

உணவு வகைகள் -- சிக்கன் ஷவர்மா...



                        அமீரகத்தில் சிக்கன் ஷவர்மா என்பது பரவலாக பலராலும் உண்ணப்படும் ஒரு உணவு. பெரும்பாலானா காஃபிட்டேரியாகளில் இந்த சிக்கன் ஷவர்மா மாலை வேளைகளில் கிடைக்கும். மிகக் குறைந்த நேரத்தில் தயாரிக்கக்கூடியதும், சுவையானதாகவும் விலை குறைவானதாகவும் இருப்பதால் இந்த ஷவர்மா உணவு இங்கு மிகவும் பிரபலம்.

வாருங்கள் ஷவர்மா உணவைப் பற்றிப் பார்ப்போம்....


கோழி, வான் கோழி, ஆடு, மாடு ஆகியவற்றின் இறைச்சிகளில் ஷவர்மா தயாரிக்கப்பட்டதாம். இதன் பிறப்பிடமாக பல நாடுகளைச் சொல்கிறார்கள் அவற்றுள் லெபனான், துருக்கி,சிரியா போன்றவை குறிப்பிடத் தகுந்தது.


பெரும்பாலும் கடைகளில் கிடைப்பது சிக்கன் ஷவர்மாதான். எலும்பில்லாத கறியை, தயிர், வினிகர், உப்பு, ஆலிவ் எண்ணெய் பொன்றவற்றைக் கலந்து ஊற வைத்து, பின்பு ஒரு நீண்ட கம்பியில் குத்தி அடுக்கடுக்காய் வைத்து, பக்க வாட்டில் உள்ள அடுப்பின் உதவியுடன் சுடுகிறார்கள். 


கறி வேக வேக, குத்திவைக்கப்பட்டிருக்கும் கம்பியை சுற்றி எல்லாப் பக்கமும் நன்கு வேக வைக்கிறார்கள். நன்கு வெந்த கறியை பக்க வாட்டில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கீழே இருக்கும் தட்டில் சேகரிப்பார்கள்.

பின்பு நீளமாக நறுக்கப்பட்ட தக்காளி, வெள்ளரிக்காய், லெட்யூஸ் போன்றவற்றை சேர்த்து, கொஞ்சம் ஹமூஸ் 

(இது ஒரு லெபனீஸ் தயாரிப்பு, வெள்ளை சுண்டக்கடலை, வெள்ளை எள், இன்னும் சில பொருட்கள் கலந்து ஆகியவற்றை அரைத்து, ஆலீவ் எண்ணெய் கலந்து இருப்பது ஹமூஸ்) கலந்து ஒரு ரொட்டியில் சுற்றிக் கொடுப்பார்கள்.  அந்த ரொட்டிக்குப் பெயர் குபூஸ்... ஷவர்மா குபூஸ்....

உடனடியாக கிடைக்கக் கூடிய ஒரு உணவு, சுவையானதும் கூட... நல்லா பசி அடங்கும்... விலையும் குறைவு... 3.50 திராம்ஸ்களிலிருந்து ஷவர்மா கிடைக்கிறது. நான் துபாய் வந்ததும் சாப்பிட்ட முதல் உணவு இதுதான்... :-)

(படங்கள் இணையத்திலிருந்து; நன்றி)

அடுத்து பார்பிக்யூ....

Wednesday, August 29, 2012

உணவு வகைகள் -- சுலைமானி...

அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே.

அமீரகம்:

ஊரை விட்டு ஊர் வந்தால் நாம் ஆராய்ச்சி செய்யும் முக்கியமானவற்றில் ஒன்று அந்த ஊரின் உணவுப் பழக்க வழக்கங்கள். முதன்முதலாய் வெளிநாடு கிளம்பும் பொழுது விமானம் ஏறும் வரை குடும்பத்தை பிரிந்து செல்கிற உணர்வில் மனம் கனத்து இருப்போம். பின்பு அதுவரை அறிந்திராத பல குடியேற்ற விதிமுறைகளை அறிந்து எல்லா கட்டுப்பாடுகளையும் முறையாகப் பின்பற்றி விமானத்தில் ஏறி அமர்ந்ததும், விமானத்தின் உள்புறத்தையும், சிப்பந்திகளையும் கண்டு வியந்து , ஏசி ஓடிக்கொண்டிருந்தாலும் சற்று நேரம் வியர்த்து பின்பு அடங்கும், நாமும் கொஞ்சம் இயல்பு நிலைக்கு திரும்புவோம்....

ஒரு வழியாக விமானப்பயணம் முடிந்து அமீரகம் வந்து சேர்ந்தபின் கண்டவைகளைப் பற்றி இந்தப் பதிவு. இப்ப நாம பார்க்கப் போவது அமீரகத்தில் உள்ள உணவுப்பொருட்கள் மற்றும் உணவுகளைப் பற்றி.

பல நாட்டு மக்கள், பல மொழிகள்,பல கலாச்சாரங்கள் கொண்டவர்கள் வேலை பார்த்துக் கொண்டு வாழுமிடம் அமீரகம். இது தவிர சுற்றுலாப் பயணிகளும் மிகுதியாக வந்து போகுமிடங்களில் ஒன்று அமீரகம். இங்கு ஒரு தெருவிலோ, சாலையிலோ நடந்து சென்றால் காதில் பல மொழிகள் கேட்கும். வித விதமான மக்கள் அங்குமிங்கும் வேலை செய்து கொண்டிருப்பதையோ, சுற்றுலா காட்சிகளை கண்டு களிப்பதையோ  காண இயலும்.

உணவுகள் ஒரு பார்வைனு தலைப்பு வச்சிட்டு இப்படி ஏதேதோ சொல்லிக்கிட்டு இருக்கிறேன் என்று நினைக்கிறீங்களா....!? இதோ வந்துட்டேன்....
இப்படி பல நாடுகள் மற்றும் கலாச்சார மக்கள் வசிக்கும் இடமென்றால் கண்டிப்பாக அவர்களின் உணவுகளும் இங்கே கிடைக்குமல்லவா... 
ஆமாம்... அமீரகத்தில் அனைத்து வகை உணவுப் பொருட்களும், உணவுகளும் கிடைக்கும்.... நாடுகள் மற்றும் கலாச்சார இனங்கள் சார்ந்த உணவகங்கள் பல இங்கிருக்கின்றன.

உணவுப்பொருட்கள்:

இங்கும் காய்கறி சந்தை இருந்தாலும், பெரும்பாலும் மக்கள் உணவுப்பொருட்கள் வாங்குவதி பெரிய பெரிய சூப்பர் & ஹைப்பர் மார்க்கெட்களிலும் மற்றும் க்ராசரி (Grocery) என்றழைக்கப்படும் சிறிய பலசரக்கு கடைகளிலும்தான். இந்தக் கடைகளில் உணவுப் பொருட்களின் வகைகளுக்கேற்ப தனித்தனியா அழகாக,  பெயர் மற்றும் விலை விபரங்களோடுஅடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.
      
 
 

கருவாடு முதல் கம்ப்யூட்டர்கள் வரை அனைத்தும் சூப்பர் மற்றும் ஹைப்பர் மார்க்கெட்களில் கிடைக்கும்.


இது போன்ற ஒரு   ட்ராலியைத் தள்ளிக் கொண்டு போய்,தேவையான பொருட்களை அதில் நிரப்பி வந்து பணம் கட்டி வாங்கிக் கொள்ளலாம். (பெரிய லாரியைக் கூட ஓட்டிடலாம், இந்த ட்ராலியை நம்ம நினைச்ச திசையில் தள்ளுவதும் ரொம்ப கடினம் :-)

இங்கு உணவுப்பொருட்கள் விற்பதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருப்பது மட்டுமல்லாமல் முறையாகவும், கடுமையாகவும் பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் முனிசிபாலிட்டி கடுமையான நடவடிக்கைகள் எடுத்து விடுவார்கள். மக்கள் உணவுப் பொருட்கள் வாங்கும் போது பெரும்பாலும் இரண்டு விசயங்களைப் பார்ப்பார்கள். 1: Made in எந்த நாட்டு தயாரிப்பு என்பது; இரண்டு: Expiry Date. இதைப் பார்த்துதான் பொருட்கள் வாங்குகிறார்கள்.  

எல்லா உணவுப்பொருட்களும் பாக்கெட்களிலும், டின்களிலும், கேன்களிலும் அடைச்சு வச்சிருப்பாங்க்... உடனுக்குடன் இறக்குமதியான காய்கறிகளும் கிடைக்கும் பெரிய பெரிய ப்ளாஸ்டிக்  ட்ரேகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். தேவையானவற்றை அங்கிருக்கும் ப்ளாஸ்டிக் பைகளில் எடுத்துப் போட்டு, அங்கே எடை போடுவதற்கென சிலர் டிஜிட்டல் எடை மிசின்களோடு அமர்ந்திருப்பார்கள், அவர்களிடம் எடை போட்டுக் கொள்ள வேண்டும். எடை மற்றும் அதற்கு விலையை ப்ரிண்ட் செய்து நமது காய்கறிப் பைகளில் ஒட்டி விடுவார்கள். பார்கோடு மூலம் பொருட்களி விலைகளை கணக்கிட்டு மொத்தமாக பணம் கட்டி விட வேண்டியதுதான். எல்லா சூப்பர் மார்க்கெட்களிலும் கிரெடிட் / டெபிட் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப்படும். 

சில படங்கள் இணையத்திலிருந்து




     


இது தவிர இறைச்சிக்கென்று தனியாக ஒரு இடம் இருக்கும். அங்கே அன்றன்று வெட்டி வைக்கப்பட்ட இறைச்சிகள் பாக்கெட்டுகளில் போட்டு வைத்திருப்பார்கள். முழு கோழி, பெரிய இறைச்சித் துண்டங்களும் கிடைக்கும். இறைச்சியில் விரும்பிகிற பகுதியை நமக்குத் தேவையான அளவுக்கு வெட்டியும் தருவார்கள்.



    


சரி உணவுப் பொருட்கள் வாங்கியாச்சு... இனி உணவகங்களையும், உணவு வகைகளையும் பார்ப்போம்....


டீக்கடையில் இருந்து தொடங்குவோம்...

நம்ம ஊரில் டீக்கடை என்று ஒன்று உண்டென்றால் அங்கே பொதுவாக, டீ,காபி, சிகரெட்,பஜ்ஜி, வடை, முறுக்கு.... இப்படி பல விதமான சிறு தீனிகள் கிடைக்கும். அதுபோல இங்கே மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் இருக்கும் டீக்கடைகளுக்குப் பெயர்... காஃபிட்டேரியா(cafeteria).

காஃபிட்டேரியாக்கள் பெரும்பாலும் மலையாளிகள் நடத்தும் கடைகளாக இருக்கின்றன. இங்கு டீ, காபி, பஜ்ஜி, சிந்தாமணி, வடை, வாழைப்பழம், கடலை மிட்டாய், எள்ளு மிட்டாய், இளநீர் என இப்படி பல தீனிகளும், பெரும்பாலான இந்திய உணவுகளும் கிடைக்கும். இட்லி, தோசை, புரோட்டா, புட்டு கடலை ,தால் ப்ரை... இப்படி நம்ம ஊர்ல கிடைக்கிற எல்லா உணவுகளும் இங்கு கிடைப்பதால் அதைப்பற்றி விரிவாக எழுதாமல் மேற்கொண்டு செல்கிறேன்... ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்... இந்திய உணவு குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரள உணவுகள் எல்லாமே கிடைக்கின்றன.

ஆதலால் இங்கு புதிதாய் தென்பட்ட உணவு வகைகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறேன்.
நம்ம ஊரில் கடுங்காப்பி, வர டீ, கட்டஞ்சாயா இப்படிக் குடிச்சிருக்கிறோம். இங்கு அதற்குப் பெயர் சுலைமானி... சுலைமானி அல்லது ப்ளாக் டீ... எல்லா காஃப்டேரியாவிலும் இந்த சுலைமானி கிடைக்கும். இங்கு கடைகளில் Dip Tea pocket  ஐ இது போன்ற தெர்மோகோல் அல்லது காகித குவளையில் போட்டு, சுடுதண்ணி ஊத்திக் குடுத்திருவாங்க.... ரொம்ப எளிதா சுலைமானி தயாராகிடும்.
 


இதே சுலைமானியை ஒரு பெரிய அலுவலகத்திலோ, உணவகத்திலோ அல்லது அரபி நண்பர்களின் விருந்திலோ குடித்தால் அதன் சுவையும் மணமும் இன்னும் கூடுதலாக இருக்கும். அங்கு தயாரிக்கப்படும் சுலைமானியில் அளவாக இனிப்பு கலந்திருப்பார்கள், கூடுதலாக இரண்டு அல்லது மூன்று சிறிய குங்கமப்பூ துகள்களை கலந்திருப்பார்கள். அது நல்ல நிறத்தையும் மணத்தையும் தரும். கீழே உள்ள படம் போல..




அதற்கடுத்ததாக சிக்கன் சவர்மா...

..............................

Monday, August 27, 2012

முன்பொரு நாள் மழை பெய்தது - மழையைக் காட்டினேன் என் மகளுக்கு...

பளிச்சென வெளிச்சம் ....

சன்னல் கண்ணாடி ஊடுறுவி மின்னல் அறை நிறைத்தது...
தூரத்தில் விளையாடிய மகள் வந்து என்னைக் கட்டிக் கொண்டாள்....
கடும் புழுதிக் காற்று பேரிரைச்சலோடு.....
கூடவே வந்தது டம் டும் என சத்தம்...

மனசுக்குள் பைய ஒரு விதமான மகிழ்ச்சி பொங்குகிறது, 

ஆம் மழை வரப்போகுது....
எனக்கு மிகவும் பிடித்த மழை வரப் போகிறது.....
மழை இறைவன் கொடுத்த கொடை, 
எண்ணிலடங்கா மகிழ்ச்சி மழையை வரவேற்க... 
ஆஹா மழை பார்க்கப் போகிறேன் துபாயில்...




அப்பா, யாரோ க்ராக்கர்ஸ் போடுறாங்க... 

இல்லம்மா அது க்ராக்கர்ஸ் இல்ல, அதான் இடி...

இடினா என்னப்பா? 

இடினா,அதான்மா தண்டர், 
அதாவது மேகமெல்லாம் இருக்குல்ல, 
அதுக ரெண்டும் முட்டிக்கும் போது வர்ர சத்தம்தான் இடி.... 

ஏன்பா அவய்ங்க முட்டிக்கிறாய்ங்க.....

அதுவாம்மா, வெளில பாரு காத்து வேகமா அடிக்குதா, இருட்டா வேற ஆகிருச்சா... 
அதான் அவய்ங்க கண்ணு தெரியாம வேகமா போயி முட்டிக்கிறாய்ங்க.....

அப்படியாப்பா..... ஆமாம்மா




மா வேகம் மழை வேகம் அல்லவா...

தடதடவென கொட்டத் தொடங்கியது மழை....

துள்ளிக் குதித்தாள் என் மகள்....


அப்பா மழைப்பா, மழை.....


ஆமாம்மா மழைதான்.... 

அழைத்துச் சென்றேன் வாசலுக்கு...
மழையைக் காட்டினேன் என் மகளுக்கு...

அங்கே பக்கத்து வீட்டுக் குழந்தைகளும் 

பெற்றோர்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்....
அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி... 
மழை அதுவும் இங்கு பெய்யும் மழை மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது....

கொஞ்ச நேரம் மழைச்சாரல் எங்களை நனைக்கும் படி நின்று கொண்டு வேடிக்கை பார்த்தோம்....


மழை மனதை ஏதோ ஏனோ இலகுவாக்கியது....

ஒவ்வொரு மழையும் எதோ ஒரு நினைவுகளை சுமந்தே இருக்கிறது....
எத்தனையோ நிகழ்வுகள் இந்த மழைக் காலத்தில் நடந்தேறியிருக்கிறது, 

அத்தனையும் என் நினைவில்.... 

மழை பார்த்து ரசிக்கும் மகிழ்ச்சியில் 
இருந்த என் மனம், 
மெல்லப் பின்னோக்கி சென்றது...



நீங்களும் வாங்க என்னோடு என் ஊருக்கு....


மழை வாசம், மண் வாசம்...


மழை பெய்யும் போது 


யாருமில்லாத சாலையில் நனைந்து கொண்டு புல்லட் ஓட்டும் சுகம்....

உடல் நடுங்க எத்தனை பயணங்கள் இந்த மழையில்....  
மழை ஆரம்பிக்கவும் கூடு தேடி குஞ்சுகளோடு ஓடி வரும் கோழிகள்
ஆடுகளும் மாடுகளும் எழுப்பும் சத்தம்..
மழை பெய்தவுடன் வீட்டில் அம்மா செய்யும் திடீர் பலகாரங்கள். சூடான காஃபி...
கிராமங்களில் நுழைவாயிலில் இருக்கும் சிறிய கடை அல்லது டீக்கடையில்
மழைக்காக அண்டியிருக்கும் மனிதர்களும் கால்நடைகளும்....


மழை நின்ற பின் 


வரும் நட்டுவாக்காலிகள்...

முறையான இடைவெளியுடன் தவளைகள் எழுப்பும் சத்தம்....
கூரையில் இருந்து சொட்டும் மழைத்துளியின் சத்தம்....
சிறிய மரம் செடியை உலுப்பி உருவாக்கும் செடி மழை...

மழை பெய்த மறுநாள் 


திடீரென தூய்மையான சாலைகள்,

உதிர்ந்து கிடக்கும் பன்னீர்ப் பூக்கள்,
புற்றை விட்டு வெளிக்கிளம்பும் ஈசல்கள்...
சிவப்பு வண்ண வெல்வெட் பூச்சிகள்....
தீடீரென முளைக்கும் காளான்கள்
மழை நீர் ஓடி உருவான ஆற்றுப் படுகைகள் போல சின்னஞ்சிறு வாய்க்கால்கள்

கூடவே டீக்கடை பெஞ்சுகளில் நடக்கும் 

முதல் நாள் மழை பற்றிய புள்ளி விவரங்கள், வர்ணனைகள்,விவாதங்கள், தீர்ப்புகள், ....
சூடாக டீ குடித்துக் கொண்டு அவர்கள் பேச்சைக் கேட்டிருக்கிறீர்களா!?
அதுவும் ஒரு சுகம்தான்...

நேத்து மானம் கருத்தப்பவே சொன்னேன்ல

எக்கண்டமும் மழைன்னு இருக்குன்னு .... பாத்தியா.... ராவெல்லாம் கொட்டித் தீர்த்திருச்சுய்யா...
ஆமாய்யா பேப்பர்ல போட்டிருக்குயா.... பெரும்பகுதி மழையாம்யா... (எழுதப் படிக்க தெரிஞ்சவர் இவர்)
இனி வராதுப்பா, மானம் வெளுத்திருச்சு...

இப்படி பல விதமான பேச்சுகள் நடக்கும் மழை ஆரம்பிச்சு முடிக்கிற வரைக்கும்.....


ம்ம்ம் மழை விட்டதும் திரும்பியது

என் நினைவுகள் மீண்டும் துபாய்க்கு...

மீண்டும் எப்போது வரும் மழை...

மனதைக் குழந்தையாக்கும் மழை...
வா மழையே வா...
ஆண்டுக்கொரு முறையேனும் வா...

Sunday, August 26, 2012

செல்ஃபோன் வச்சிருக்கீங்களா....



அனைவருக்கும் வணக்கம்,

அது செல்ஃபோன் வர ஆரம்பித்தகாலம் 1998 இருக்கும்னு நினைக்கிறேன், செல்ஃபோன் அப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா மக்களிடம் பிரபலமாக ஆரம்பிச்சது. ரொம்ப அரிதா ஒருத்தர் ரெண்டு பேர் கையில இல்ல இல்ல சட்டைப் பையில துருத்திக்கிட்டு நிக்கும். அப்ப செல்ஃபோன்னா நோக்கியா 5110 தான். நல்லா பெரிசா கருப்பா கட்டியா இருக்கும். ஆண்டென்னா வெளில நல்லா நீட்டிக்கிட்டு இருக்கும்.


கீழே படத்துல இருக்கு பாருங்க இதான் அந்த நோக்கியா 5110 மாடல், அப்ப இதெல்லாம் பெரும்பாலும் பணக்காரங்கதான் வச்சிருப்பாங்க... விலை 6000 லிருந்து 10000 வரைக்கும் சொல்லுவாங்க வந்த புதிதில்....

Inline image 1
சிம்கார்டு வாங்கனும்னா அப்ப ஏர்செல் மட்டும்தான் Inline image 2, போஸ்ட்பெய்டு கனெக்சன் வாங்கனும், சிம்கார்டின் விலை 3500 ரூபாய் இருந்துச்சு. இன்கமிங் காலுக்கும் கட்டணம் கட்ட வேண்டியிருந்தது. இன்னொரு கம்பெனி BPL சிம்கார்டு Inline image 3... இவங்க ரெண்டு பேருதான் அப்ப ரொம்ப பிரபலம்.
செல்ஃபோன் விக்கிறதுக்கு இப்ப மாதிரி நிறைய கடைகள் அப்ப இல்லை, சில கடைகள் மட்டுமே இருந்தது அப்ப, அதுக்கு மேல போனா மீனாட்சி பஜார், பாண்டியன் பஜார் இங்க போனாத்தான் செல்ஃபோன் வாங்க முடியும்.
சரி செல்போனும் சிம்கார்டும் வாங்கியாச்சு அப்புறமென்னான, அந்த செல்போனுக்கு ஒரு பிளாஸ்டிக் கவரு போடனும்ங்கனு பஜார்ல சொன்னாங்க, கவர் போடாட்டி செல்ஃபோன் கெட்டுப்போகுமாம்,
சரிங்க அந்தக் கவர் எம்புட்டுனா , 500 ரூபாய் கவர்னு சொல்லி அதையும் தலையில் கட்டி இல்ல செல்ஃபோன்ல மாட்டி விட்டுவாங்க... கடைசியில ஒரு செல்ஃபோன் நம் கையில் வரும் போது கிட்டத்தட்ட பத்தாயிரம் செலவாகிடும்.
நோக்கியா தவிர BPL செல்போனும் அப்ப கிடைத்தது. BPL செல்ஃபோன் இன்னும் ரொம்ப பெரிசா இருக்கும்... நம்ம சட்டைப் பையில் திணிச்சு வைக்கனும்... அப்புறம் பஜார்ல அல்காடேல் மொபைல் போன் விற்பனைக்கு கிடைச்சது....Inline image 4 அல்காடேல் பயன்படுத்த ரொம்ப கடினம்...... எந்த பட்டனை அமுக்கிறதுன்னே புரியாது.... அப்புறம் சோனி எரிக்ஸன் , மோட்டோரோலா., எல்ஜி., சாம்சுங்... இப்படி பல கம்பெனி போன்கள் கிடைக்க ஆரம்பித்தன.
செல்ஃபோனை வாங்கிய பிறகு சில ஆரம்பகால பிரச்சனைகள் இருந்தன, அது என்னானா,உள்ளூர் நம்பருக்கு பேசனும்னாலும் STD code முன்னாடி போட்டு அழைக்கனும். அதை தெரிஞ்சு வச்சுக்க வேண்டியிருந்தது,
இன்னொரு பிரச்சனை , நம்மளுக்கு யாரும் போன் பண்ணவே மாட்டாங்க, சும்மாவே போன எடுத்து வெறிச்சு வெறிச்சு பாத்துக்கிட்டு இருக்கனும்.
அப்புறம் யாராவது போன் பண்ணாலும் சீக்கிரம் கட் பண்ண சொல்லனும், இன்கமிங்கும் காசாச்சே.........
அந்த நேரங்களில் நண்பர்களுக்கிடையே ஒரு பேச்சு நடக்கும் போது கண்டிப்பா செல்ஃபோனும் ஒரு பேச்சாக இருக்கும்.
மாப்ள, அவனும் செல்ஃபோன் வாங்கிட்டாண்டா...
அது என்ன மாடல்டா...
ஸ்லீக்கா இருக்கு மாப்ள...
அமெரிக்காகாரய்ங்க இதெல்லாம் ரொம்ப காலமா யூஸ் பண்றாய்ங்களாம்டா...
ஆமாடா நாம் ரொம்ப லேட்டுடா...
செல்ஃபோன் இருந்தா ஜாரியெல்லாம் ஈஸியா கரெக்ட் பண்ணிடலாம்டா...
புதுபோன் வாங்கினதுக்கு பார்ட்டி வை மாப்ள...
புது ரிங்டோன் வந்திருக்கு மாப்ள...
ஏ சாமிபாட்ட ரிங்டோனா வைடா...
இப்பல்லாம் நான் போன்ல அலாரம் வச்சுத்தான் எந்திரிக்கிறேண்டா...
செல்போனுக்கு புது கவர் போடனும் மாப்ள...
இப்படி பல பல பேச்சுகள் நடக்கும்.
மிகக் குறைந்த காலத்திலேயே நோக்கியா 3310 வர ஆரம்பிச்சது. Inline image 5அது ஆண்டெனா இல்லாம பாக்க அழகா இருந்துச்சு...
பட்டன்லாம் அமுக்க ரொம்ப இலகுவா இருக்கும் இதுல. எந்த அழைப்பும் வராம போன் வாங்கி வச்சிருக்கவுங்களுக்கு இதுல இன்னொரு விசயம் ரொம்ப பிடிச்சு போயிருந்தது. அது என்னானா , நோக்கியா 5110 வில் இருந்த Snake Game ஐ விட இதுல இருந்த Snake Game ரொம்ப நல்லாயிருந்து, சில கூடுதல் விசயங்கள் இதுல இருந்துச்சு விளையாட. அதுனால இந்த போன் வச்சிருக்கவங்க Snake Game விளையாட விரும்புவாங்க.... அப்புறம் நோக்கியா ஒவ்வொரு மாடலா அறிமுகப் படுத்திக்கிட்டே இருந்தாங்க.....
செல்ஃபோன் வாங்கினாலும் , இந்த செல்ஃபோன் ஆப்பரேட்டர்கள் தமிழ்நாட்டை ரெண்டா பிரிச்சு வச்சிருந்தாங்க, சென்னை ஒரு பகுதியாகவும் சென்னையைத் தவிர மற்ற பகுதிகள் இன்னொரு பகுதியாகவும் வச்சிருந்தாங்க. இந்தப் பகுதிகளை Rest of TamilNadu (ROTN) என்று டெக்னிக்கலா அழைப்பார்கள். இப்ப என்ன பிரச்சனைனா, சென்னைக்கு மற்ற பகுதிகளில் இருந்து போனா ரோமிங் கட்டணம் செலுத்த வேண்டும். இன்கமிங் காலுக்கும் கூடுதல் கட்டணமிருந்தது.
அப்ப சென்னையில Wings மற்றும் RPG Cellular Inline image 6என்கிற சில நிறுவனங்கள் இருந்ததென நினைக்கிறேன். அந்த RPG Cellular தான் பின்னாளில் ஏர்செல்லாக மாறியது. அப்ப சென்னைக்கு போறதே எனக்கு சினிமால பட்டணத்துக்கு போறேனு சொல்ற மாதிரிதான் அதுனால சென்னையில் இந்த செல்ஃபோன் வர ஆரம்பித்த காலங்களில் என்ன நடந்தது என தெரியவில்லை. அதனால மதுரைப் பகுதியை வச்சே எழுதுறேன்.

தொடர்ந்து படியுங்கள் (தயவுசெய்து)... படிக்கிறீங்களா??
இப்பத்தான் ஏர்டெல் நிறுவனம் புது திட்டம் கொண்டு வந்தாங்க, ஒரே சிம்கார்டில் இரண்டு நம்பர் கொண்டு வந்தாங்க, ROTN பகுதியில் பயன்படுத்தப் படும் எண் சென்னைக்கு போனதும் switch off செய்து switch on பண்ணனும், அப்ப PIN கேட்கும் 20000, டைப் பண்ணா சென்னை எண்ணாக மாறிவிடும், அந்த நம்பரில் யாரு போன் பண்ணாலும் இன்கமிங் கால் இல்லை. ROTN பகுதிக்கு வந்ததும் மறுபடி switch off செய்து switch on பண்ணா PIN கேட்கும் அப்ப 10000 என டைப் பண்ணனும். உடனே பழைய எண்ணுக்கு வந்து விடுவீர்கள்.
ஏர்டெல் ப்ரிபெய்டு கார்டு கொண்டு வந்ததும் மொபைல் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. சிம்கார்டின் விலையும் மலிவாக கிடைத்தது. நோக்கியா 5110 விலையும் குறைந்தது, குறிப்பா அந்தக் கவரின் விலை 50ரூபாய்க்கு கிடைத்தது :-)
இந்த நேரத்தில்தான் ஏர்செல்லுக்கு ஏர்டெல்லுக்கும் போட்டி,Inline image 8   Inline image 7 ஏர்செல் எல்லாப் பக்கமும் டவர் போட்டுட்டாங்க, அதனால சிக்னல் நல்லா கிடைக்கும். ஆனா வாய்ஸ் க்ளாரிட்டி இல்லை. ஏர்டெல்அப்பத்தான் வந்திக்கிட்டு இருந்தாங்க, அதிகமான டவர் இல்லை, இதனால் கிராமப் புறங்களில் இவர்களால் விற்பனை அதிகரிக்க இயலவில்லை.
இப்படி செல்ஃபோன் ஆதிக்கம் பெருகிய வேளையில், பலரின் சட்டை பாக்கெட்டுகளில் துருத்திக் கொண்டிருந்த செல்போனை காண முடிந்தது. அப்புறம் இடுப்பு பெல்டிலும் தொங்கிக் கொண்டிருந்தது செல்ஃபோன்.
இதயத்துக்கு ஆகாதாம் கதிர்வீச்சு அதிகமாப்பா, அதான் இடுப்புல தொங்க விட்டுருக்கோம்னு சொல்லுவாங்க.....
இடுப்புல தொங்குனா ஆண்மை போயிரும்னு கைக்குட்டையில் சுற்றி உள்ளங்கையில் வைத்துக் கொண்டிருந்தவர்களும் உண்டு.
ஒரு கடைக்கோ அல்லது ஒரு நிகழ்ச்சிக்கோ அல்லது ஒரு வீட்டிற்கோ போனா முதலில் செல்போனை எடுத்து எல்லாரும் பார்க்கும் படியாக முன்னால் உள்ள மேஜையிலோ அல்லது டீபாயிலோ இப்படி எதுவுமே இல்லாவிட்டல் கையில் தெரியும்படியா வைத்துக் கொண்டிருப்பார்கள்.... அது கௌரவத்தை காட்டும் பொருளாகவும், பெருமையான விசயமாகவும் இருந்தது...
செல்லுபோனெல்லாம் வச்சிருக்காருப்பானு சொல்லுவாங்க. அதுல ஒரு பெருமை. அவனுக்கென்னப்பா வண்டி செல்போனுனு செட்டிலாகிட்டான்பானு சொல்லுவாங்க, பில் கட்டுறவனுக்குத்தான் தெரியும் கண்ணுக்கு தெரியாம எம்புட்டு காசு கணக்குல சேத்திருக்காங்கனு, ஒருநாள் பில் கட்ட தாமதமானும் அபராதம் அத்துக்கிட்டு போயிடும்.....
இப்படி செல்போன் பலர் கையிலும் புழங்க ஆரம்பித்த வேளையில், மதுரை சாலைகளில் ஒரு பெரிய இயந்திரம் வந்து ரோட்டை நடுவுல கிழிச்சிக்குட்டு உள்ள ஒரு கேபிளை பதிச்சிக்கிட்டு போச்சு... என்னமோ ஏதோனு வேடிக்க பாத்திக்கிட்டு இருந்தோம், அப்பத்தான் அங்க வந்தார் அம்பானி. Inline image 9
DAE (Dirubhai Ambani Entrepreneurship )இந்தத் திட்டத்தோட ரிலையன்ஸ் உள்ள வந்தாங்க , பத்தாயிரம் கட்டி உறுப்பினரா சேரனும் , நமக்கு ஒரு செல்போன் குடுப்பாங்க, அப்புறம் நாம ஒரு பத்து பேரைச் சேர்க்கனும், அவுங்க அப்புறம் பத்து பேரைச் சேக்கனும்னு ஒரே குழப்பமா திட்டம் கொண்டு வந்தாங்க... அம்பானிட்ட இருக்கிற பிரச்சனை ஒவ்வொரு மாதமும் ஒரு புது திட்டம் வரும், முதலில் சேர்ந்தவன் அடுத்து வந்த திட்டம் பற்றி புரியாம குழம்பி போயிடுவான்.
திடீர்னு ஒருநாள் 500 குடுத்தா போதும் 2 செல்போன் தரேன்னுட்டார் அம்பானி, எல்லாரும் 500 ரூபாய் கட்டி ரெண்டு ரெண்டு போன் வாங்கி என்ன செய்றதுனு தெரியாம வச்சிக்கிட்டு இருந்தாங்க. பில்லு எகிறுச்சு, எப்படி கணக்கு பண்றாங்கனு யாருக்கும் புரியலை. ரிலையன்ஸில் இருந்து ரிலையன்ஸுக்கு பேசினா இலவசம்னு அறிவிப்பு வந்தவும் குண்டக்க மண்டக்க பேசி அப்புறம் பில் கட்ட முடியாம செல்போன தூக்கி எறிஞ்சவங்களையும் பாத்திருக்கேன். இப்படி கட்டாத பணத்தை வசூல் பண்ண ரெக்கவரி டீம் என்று ஒன்னை ஆரம்பிச்சு அவங்க போன் போட்டு விசாரிச்சு ஆள கண்டுபிடிச்சு கட்டப் பஞ்சாயத்து பண்ணி பணம் வசூல் பண்ணாங்க ஓரளவுக்கு.
அம்பானி வந்ததும் இதுக்கு முன்னாடி வந்த ஏர்செல் ஏர்டெல் எல்லாம் திடீர்னு கட்டணம் குறைச்சிட்டாங்க, செல்போன் பல கவர்ச்சிகரமான திட்டங்களுடன் வெற்றியடைய ஆரம்பிச்சது..... இம்புட்டு மற்ற நிறுவனங்கள் வளர்ச்சியடைந்த நிலையில் BPL , ஹட்ச் ஆகி அப்புறம் வோடபோனாகி விட்டது.... Inline image 10  Inline image 11  Inline image 12
அனைத்து நிறுவனக்களுக்கும் இடையே கடும் வியாபார போட்டி, இன்கமிங்க் பிரீ, குறிப்பிட்ட எண்ணுக்கு அவுட்கோயிங் ப்ரீ, SMS ப்ரீ என பல திட்டங்கள் வந்து விட்டது. செல்போன் விலையும் குறைந்ததால் மக்கள் கையில் எளிதில் கிடைக்க ஆரம்பித்து விட்டது. அதுவரை கௌரவத்தின் அடையாளமாக பார்க்கப்பட்ட அந்தச் செல்போன் , எல்லார் கைகளிலும், பைகளிலும் கிடைக்க ஆரம்பித்தது.
அடுத்தடுத்து புதுசு புதுசா செல்போன் மோகங்கள் உருவாக ஆர்மபித்தது. அது என்னானா கலர் டிஸ்ப்ளே செல்போன், பாலி போனிக் ரிங் டோன் செல்போன், எஃப் எம் ரேடியோ செல்போன், கேமரா செல்போன், மெரிகார்டு உள்ள செல்போன் அப்படி இப்பிடினு ஏகப்பட்ட செல்போன் வந்தாச்சு...
சினிமாவிலும் செல்போன் அதிகமாக காட்டப்பட்டது, மன்மதன்ல சிம்பு நோக்கியா 6600 Inline image 13 வச்சிருக்கிறத பாத்துத்தான் நான் அந்த போனே வாங்கினேன்.
தற்போதைய காலகட்டத்தில் செல்போன் மிக அவசியமான ஒன்றாகிவிட்டது. இன்றியமையாதது என்று சொன்னாலும் தகும், அந்த அளவுக்கு செல்போன் தொழில்நுட்பம் இன்று பயன்படுகிறது.
குறுந்தகவல் ஒரு தகவல் தொடர்பு ஊடகமாகவே மாறிவிட்டது. புரளியும் சரி செய்தியும் சரி உடனே பார்வார்ட் மெசேஜாக பறந்து விடுகிறது எல்லாருடைய செல்போன்களுக்கும்.
இணையம் இணைக்கும் GPRS தொழில்நுட்பம் வந்தபிறகு இணையம் நம் கைகளில் வந்து விட்டது, கணிணியை சார்ந்திருக்க தேவையில்லை, Bluetooth, WiFi எல்லாம் செல்போனுக்குள் நுழைந்து நம் வாழ்க்கையை எளிதாக்கி விட்டது..
வங்கிச்சேவை, பயணம் குறித்த தகவல்கள், அரசுத் துறை தகவல்கள் அனைத்தும் இப்போ குறுந்தகவல்களாக கைகளில் கிடைத்து விடுகிறது.
ஊரு விட்டு ஊரு பிழைக்கப் போனவர்கள், தன் வீட்டோடு தொடர்பிலிருக்க கடிதம் எழுதி காத்திருக்க தேவையில்லை, ஊரிலிருக்கும் ஒரே பெரிய வீட்டிற்க்கு போன் போட்டு(அங்க மட்டும்தான் ஃபோன் இருக்கும்) நம் வீட்டு ஆட்களை அங்கு வந்து நம் அழைப்புக்காக காத்திருக்க வைக்கவும் தேவையில்லை. எல்லோர் கைகளிலும் செல்போன், எல்லோரும் தொடர்பிலிருக்கிறார்கள்.
முன்பு வியாபாரிகள், தொழில் செய்பவர்கள் மற்றும் வெளித் தொடர்பு அதிகம் வைத்திருப்பவர்கள் சட்டைப் பைகளில் ஒரு சின்ன டெலிபோன் டைரியோ அல்லது ஒரு நோட்டோ இருக்கும் அதில் தொலைபேசி எண்களை குறித்து வைத்திருப்பார்கள், போன் செய்யும் பெரும்பாலும் அந்த குறிப்பை எடுத்துப் பார்க்காமலே, நினைவில் இருந்து எடுத்து எண்களை சுழற்றுவார்கள். ஆனா இப்ப செல்போன் வந்த பிறகு எதும் நினைவில் இல்லை, ஃபோன்புக்கை திறந்து உடனே டயல் செய்து விடுகிறோம். அதிகமா மூளைக்கு வேலை குடுக்கிறதில்லை, செல்போனை நம்பி இருந்தா போதும். ஒருவேளை செல்போன் தொலைஞ்ச் போச்சுனா , அந்த எண்களின் தொடர்புகளை மறுபடி அமைப்பதும் கடினம்தான்.
இப்ப செல்போன்ல எல்லாமும் இருக்கு, இணையம் இருக்கு, முகம் பாத்து பேசலாம், குறுந்தகவல் அனுப்பலாம், MMS அனுப்பலாம், படம் பிடிக்கலாம், வீடியோ எடுக்கலாம், என்ன வேணாலும் கைக்குள் இருக்கும் செல்போன் மூலம் காணலாம்.
இவ்ளோதான் செல்போன் பற்றிய என் பார்வை.
இங்க செல்போன் அறிமுகமானதையும், வளர்ச்சியையும் மற்றும் அதன் நல்லதையும் மட்டும் பேசியிருக்கிறேன். கெட்டதெல்லாம் எல்லாருக்கும் தெரியுமே.
இதுவரை படித்த அனைவருக்கும் என் நன்றிகள்.

எறிபந்து


எறிபந்து

உடல் தின்னும் பசி
உயிர் சுருக்கும் உணவு
உடல் முயங்கிப் பிழை
உயிரின் மிச்சமாய் உறவுகள்
தன்னை விழுங்கும் நிழல்
தேவை மிஞ்சும் தேடல்
என்னை எழுதியவன் நீ
நின்னை அறியாமல் நான்
மனதைப் படிப்பவன் நீ – உன்னிடம்
மறைத்ததாய் நம்பும் மடையன் நான்
கள்ளமின்றி அனுப்பி வைத்தாய்
தற்காலிக தங்கல் முடிந்து
பாவமூட்டையோடு திரும்பி வருவேன்
மன்னிப்பாயா….

வெள்ளிக்கிழமை -- ஒரு பெட்டி ஒரு பை


வெள்ளிக்கிழமை மற்றவர்களுக்கு எப்படியோ வளைகுடா பகுதியில் வேலை பார்க்கும் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஒரு பெரும் மகிழ்ச்சியான நாள். ஆறு நாட்கள் கடும் வேலைக்குப் பின் கிடைக்கும் ஒரு ஓய்வு நாள். எல்லாரும்தான் வேலை பார்க்கிறோம் என்றாலும் கட்டுமானப் பணி என்பது எளிதான ஒன்றல்ல. பணி மட்டுமல்ல அவர்கள் வேலை செய்யும் இடமும் அவர்களுக்கு அயர்வை தருகிற ஒரு காரணி. வெயிலும் குளிரும் இங்கு தன் உச்சத்தை காட்டும். இவ்வாறான சூழ்நிலையில் வேலை பார்த்து, வாரத்தில் ஒரு முறையாவது ஒரு துளி ரத்தமாவது சிந்தி உழைக்கும் இவர்களுக்கு கிடைக்கும் ஒரு ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை. 

ஆம், அந்த வெள்ளிக்கிழமை, ஒரு மாலை நேரம், லேபர்கேம்ப் நோக்கிப் போவோம் வாங்க....

கட்டுமானத் துறையில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்கள் தங்குவதற்கென பல இடங்களில் லேபர்கேம்ப்களை கட்டி வைத்துள்ளனர். லேபர் கேம்ப் (தொழிலாளர்கள் தற்காலிகமாக தங்குமிடம்) என்பது இரண்டு மாடி அல்லது மூன்று மாடி உள்ள AC செய்யப்பட்ட கட்டிடங்கள்.  ஒரு அறையில் பங்கர் பெட் எனப்படும் அடுக்கு கட்டில்களாக ஆறு கட்டில்கள். ஒரு பெட்டி ஒரு சின்னப் பையுடன் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாப் பொருட்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் கட்டுமானத் தொழிலாளர்கள். பெரும்பாலும் ஒரே மொழி மற்றும் ஒரே நாடு சார்ந்தவர்கள் ஒவ்வொரு அறையிலும் இணைந்தே தங்க வைக்கப்படுகிறார்கள்.

பல லேபர்கேம்ப்கள் இருக்குமிடத்தில் ஒரு சூப்பர் மார்க்கெட், சின்ன க்ராசரிகள்,சில உணவகங்கள் இருக்கின்றன. இங்கு அனைவரும் வெள்ளிக்கிழமை அன்று கூடிப் பேசிக் கொள்கிறார்கள். இந்தியர்கள், பட்டான்கள், பெங்காலிகள், பிலிப்பினோக்கள், நேபாளிகள் என பல நாடுகளைச் சேர்ந்த மற்றும் பல மொழிகளைப் பேசும் தொழிலாளர்கள். 

கூட்டாமாக நிற்கும் அவர்களுக்கு நடுவே நின்று கொண்டு ஓவ்வொருவரின் பேச்சுவார்த்தையையும் கவனித்தால் ஆறு நாள் உழைத்த களைப்பை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பேசித் தீர்ப்பதில் அவர்களின் வேகம் தெரிந்தது. மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தாலும் ஒவ்வொருவரின் பேச்சிலும் பேசுபொருளாக ஒருமுறையேனும் தங்கள் குடும்பம் இருக்கிறது. அந்நேரம் அவர்களை அறியாமல் ஒரு ஏக்கம் அவர்களைத் தொற்றிக் கொள்கிறது.

பொறுமையாக, இன்னும் சொல்லப் போனால் நின்று நிதானமாக பேசுபர்கள் மிகவும் குறைவே. இருக்கின்ற ஒரே நாளில் எல்லாத் தேவைகளையும் முடிக்க வேண்டிய கட்டாயம். வீட்டுக்குப் ஃபோன் பேசனும், ஒரு வாரத்திற்கு சமையலுக்கு தேவையான பொருட்கள் வாங்க வேண்டும், வேறு லேபர் கேம்பில் வசிக்கும் நண்பர்களிடமும் பேச வேண்டும், ஊருக்குப் பணம் அனுப்ப போகனும் இப்படி ஒவ்வொருத்தருக்கும் பலதரப்பட்ட தேவைகள்.  ஒவ்வொருவரும் அவரவர் தேவையை அவரவரே நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். இருப்பதோ ஒரே நாள்.

கூட்டமாக நின்று கொண்டிருக்கும் டாக்ஸி ஓட்டுனர்கள், ஷேரிங் முறையில் மற்றொரு லேபர் கேம்ப் இருக்கும் இடத்திற்கு செல்ல இருப்பவர்களை கவர்வதில் சுறுசுறுப்பாக அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருக்க, இந்தக் கூட்டத்திற்கு நடுவே ஒரு டிஜிட்டல் எடை பார்க்கும் எந்திரத்தை வைத்து தரையில் அமர்ந்து ஒரு திர்ஹாமிற்கு வருபர்களின் எடை பார்த்து சம்பாதிப்பவர். ஊரில் முடிவெட்டும் தொழில் செய்து வந்தாலும் இங்கு வந்த பிறகு கட்டுமானத் துறையில் ஈடுபடுபவர்களில் சிலர், வெள்ளிக்கிழமைகளில் ஒரு ப்ளாஸ்டிக் நாற்காலி ஒரு சிறு கண்ணாடி கொண்டு வெள்ளிக்கிழமை மட்டும் அங்குள்ளவர்களுக்கு முடிவெட்டி சம்பாதிப்பவர்கள், சாலை ஓரத்தில் அமர்ந்து சாட்பட்(வட இந்திய சிறு தீனி) விற்பவர்கள், சிந்தாமணி என்று சொல்லப்படும் பயறுகளை விற்பவர்கள் என பலதரப்பட்ட மக்களை காண முடிந்தது.  

வெள்ளிக்கிழமையில் கிடைத்த நேரத்தில் இப்படி சம்பாதிப்பவர்களும் இருக்கையில், சேர்த்த பணத்தை குடியில் செலவிட்டு ஆங்காங்க சாலையை அளந்து கொண்டும், சுவறுக்கு முட்டுக் கொடுத்துக்கொண்டும் இருப்பவர்களையும் காண முடிந்தது. ஏன் இப்படி வீணாய் குடிக்கிறார்கள் என்று கேட்க முடியாது, ஏனெனில் எல்லாருக்கும் ஒரு காரணம் இருக்கும். இல்லையெனில் குடிப்பதற்காக காரணத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். சில நேரம் இரு நாடுகளுக்கு இடையே சண்டை நடக்குமாம், சில நேரம் நம் தமிழர்களுக்கிடையே சாதிச் சண்டை கூட நடந்திருக்கிறதாம். பிழைக்க வந்த இடத்தில் சாதி இன்னும் இருக்கிறது என்று கேட்ட போது கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது. 

ஒவ்வொருவரும் ஒரு கனவோடு, ஒரு கடமையோடு, இது ஏதும் இல்லாவிட்டாலும் கண்டிப்பாக கடனோடு இங்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். எஜெண்ட் சொல்லியனுப்பிய கூலி இங்கு வந்தபின் கிடைப்பது என்பது எல்லாருக்கும் அமைவதல்ல. சிலருக்கு ஏமாற்றம் மிஞ்சுகிறது. வந்த கடன் அடைக்க குறைந்தது ஓராண்டு காலமாவது உழைக்க வேண்டிய கட்டாயம், பின்பு அவரவர் உழைப்பிற்கும் பழக்க வழக்கத்திற்கும் ஏற்ப கொஞ்சம் பணம் மிஞ்சுகிறது. இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கிறது. 

கடைசியாக அங்கிருந்து கிளம்பும் போது என் நண்பனிடம் கேட்டேன் ஏன் மாப்ள, அடுத்து எப்ப சந்திக்கலாம்... சொல்றேன் அடுத்த சைட்(கட்டுமானம் நடைபெறும் இடம்) மாறிட்டா எந்தக் கேம்ப்ல போடுவாங்கனு தெரியாது. எங்க வாழ்க்கை இப்படித்தான் மாப்ள, அதான் ஒரு பெட்டி ஒரு பையோடு எங்க வாழ்க்கை போகுது. எப்ப கிளம்புனு சொன்னாலும் நாங்க கிளம்ப தயாரா இருப்போம். அடுத்து எங்கனு உறுதியா சொல்ல முடியாது....

அட ஆமாம், எதும் உறுதியா சொல்ல முடியாது மாப்ளனு சொல்லிட்டு நானும் கிளம்பிட்டேன்.

இறைவா நீ அனைத்தும் அறிந்தே இருக்கிறாய்....


இறுக்கமாய் இருக்கிறது
முழுவதும் நிரம்பி விட்டேன்
ஒற்றைப் புள்ளியில் உயிராகி
இதோ உருவம் பெற்றேன்
இனி உலகம் பார்ப்பேன் 

காற்றில் பறப்பேன்
மேகம் முட்டி ரசிப்பேன்
தென்றலில் தவழ்வேன்
எத்திசையும் எனக்கு சொந்தம்
இனி உலகம் பார்ப்பேன்

மூடியிருக்கும் கூட்டை என் 
முழு பலத்தோடு முட்டுகிறேன்
உடைத்து விடுவேன் 
இனி உலகம் பார்ப்பேன்

ஐயோ,
எதிர்பாராத காற்று
அதிர்கிறது என் கூடு
தரை தொட்டேன்
உயிர் விட்டேன்
உலகம் பார்க்கும் முன்பே
உன் அடி சேர்ந்தேன் 

இறைவா நீ அனைத்தும் அறிந்தே இருக்கிறாய்....

Inline image 1

பழைய விளம்பரங்கள் ஒரு பார்வை ...


பழைய விளம்பரங்கள் ஒரு பார்வை...



நிறுவனங்கள் தங்கள் பொருட்களை சந்தைப் படுத்த, பெரும்பாலான விளம்பர முறைகளைக் கையாள்கின்றன. தொழில் நுட்ப புரட்சிக்கு முன்னால் விளம்பரங்கள் பெரும்பாலும் குறைந்த அளவில் செய்யப்பட்டு வந்திருக்கின்றன. மக்களிடம் தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த பல முயற்சிகளை கையாண்டனர்.தொலைக்காட்சி, தகவல் தொழில் நுட்பம், மாடர்ன் ஃப்ளெக்ஸ் ப்ரிண்டிங் போன்ற ஊடகங்கள் வருவதற்கு முன்னால் விளம்பரங்கள் எப்படியெல்லாம் இருந்தன என்பதைப் பற்றிப் பார்ப்போம் வாருங்கள். 

முன்பு சில பொருட்கள் சில பகுதிகளில் மட்டுமே கிடைக்கும். எடுத்துக்காட்டாக, டொரினோ, பவண்டோ, ஒண்டிப்புலி சர்பத், மாணிக்க விநாயகர் சோடா இது போன்றவைகள் எல்லாம் எல்லாப் பகுதிகளிலும் கிடைத்தனவா என எனக்குத் தெரியவில்லை. ஆகவே, எங்கள் பகுதியில் நான் பார்த்த விளம்பரங்களைப் பற்றிய ஒரு பார்வை இந்தப் பதிவு. 

விளம்பரங்கள் முதலில் மக்களைச் சென்றடைய வேண்டும், அதற்கு மக்கள் அதிகம் கூடும் இடங்களில், பொதுவாய் பலரின் பார்வை படும் பொது இடங்களில் விளம்பரங்களைச் செய்ய வேண்டியிருந்தது. பளிச்சென்று வண்ணங்களில் எழுதப்பட்ட விளம்பரங்கள் மக்களை எளிதில் சென்றடையும். 

ஆகவே பெரும்பாலும் சிறிய சதுர/செவ்வகமான தகரத்தில் பெயிண்ட் அடித்து அதில் தங்கள் பொருட்களின் பெயர்களை அழகாக எழுதி ஆங்காங்கே தொங்க விட்டிருப்பார்கள். பேருந்து நிறுத்தங்களின் அருகில் உள்ள புளிய மரத்திலோ அல்லது மற்ற மரங்களின் மீதோ அந்தத் தகர விளம்பரங்கள் நான்கு மூலைகளில் ஆணியால் அடித்து வைக்கப்பட்டிருக்கும்....  எடுத்துக்காட்டு: T.S. பட்டணம் பொடி, டொரினோ, ரவீஸ் ஊறுகாய்....





ஊருக்குள்ள ஒன்று அல்லது இரண்டு பெட்டிக்கடைகள் இருக்கும், ஒரு டீக்கடை இருக்கும். பெரிய பேருந்து நிலையங்களுக்குச் சென்றால் அங்க பல பெட்டிக்கடைகள் இருக்கும். இந்தப் பெட்டிக்கடைகளின் முன்பு உள்ள பெட்டியிலும் இந்தத் தகர விளம்பரங்கள் ஆணி அடிக்கப்பட்டிருக்கும். பெட்டிக்கடைகளின் பெட்டியில் அழகாக பெயிண்ட் அடித்து, மேலே பிள்ளையார் சுழி போட்டு, குலசாமி பெயரை எழுதி பின்பு கடையின் பெயரையும் எழுதி, உரிமை:____________ என கடை முதலாளியின் பெயரையும் எழுதி,  பின்பு தங்கள் பொருளின் பெயரை இங்கு கிடைக்கும் என அழகாக எழுதிக் விளம்பரம் கொடுப்பார்கள்.

பின்பு கொஞ்சம் கூடுதல் செலவு பண்ணி விளம்பரங்களை கருப்பு வெள்ளையில் பிரிண்ட் செய்து ஒரு அட்டையில் ஒட்டி வைத்து கடைகளிலும், பொது மக்கள் கூடுமிடங்களிலும், பேருந்து நிலையங்களிலும் தொங்க விடுவார்கள். அந்தரங்கப் பிரச்சனைகள் பற்றிய விளம்பரங்கள் பேருந்து நிலைய கழிப்பறைக்கு நுழையும் இடங்களிலும் உள்ளேயும் சுவர்களில் ஒட்ட வைக்கப் பட்டிருக்கும். அதிலே பிரபல வைத்தியர் என்ற ஒருவரின் பெயரும் அவருடைய முகவரியும் இருக்கும்.  

இதெல்லாம் வரைந்து எழுதிக் கொடுக்க ஓவியர்கள் வேண்டுமல்லவா... அவர்களையும் பார்ப்போம்...

ஒவ்வொரு சிறு நகரங்களிலும் ஓவியர்கள் இருப்பாங்க... படம் வரையுற ஓவியர்கள், எழுத்து எழுதுகிற ஓவியர்கள்னு ஒவ்வொரு இடத்திலும் இருப்பாங்க.... படம் வரையுற ஓவியர்கள் விளம்பரத்துக்கு தேவையான, வாடிக்கையாளர் சொல்லிய படங்களை அழகாக வரைந்து முடிப்பார்கள், பெரும்பாலும் சினிமா நட்சத்திரங்களின் படங்கள் வரையப்படும்.

எழுத்து ஓவியர்கள் எழுதும் போது எழுத்தின் அளவு சரியாக இருப்பதற்காக, வண்ணப்பொடியில் (பெரும்பாலும் நீல வண்ணப்பொடி) ஒரு கனமான நூலை முக்கி எடுத்து, பதாகையின் மேல் அந்த கனமான நூலை இழுத்துப் பிடித்துக் கொண்டு மெதுவாக சுண்டி விடுவார்கள். நூலிலுள்ள வண்ணப்பொடி ஒரு கோடாக மென்மையாக பதியும். இதே போல் இரண்டு கோடுகளை சரியான இடைவெளியில் சுண்டி மென்மையாக பதிய விடுவார்கள். இரண்டு கோடு நோட்டில் நாம எழுதிப் பழகியிருப்போம் அல்லவா அது போலவே இரண்டு கோடுகள் இருக்கும். பின்பு விளம்பரத்திற்கு தேவையான வாக்கியங்களை அந்த இரண்டு கோடுகளுக்கு இடையே, அந்தப் பதாகையில், கடையின் பெட்டியில், சுவறில் அழகாக எழுதுவார்கள்.  

விளம்பரம் வரைந்து எழுதி முடித்த பிறகு கடைசியாக, எதாவது மூலையில் அவர்களின் பெயர் அல்லது அவர்கள் நிறுவனத்தின் பெயரை எழுதி வைப்பார்கள். இது ஓவியர்களின் விளம்பரம். ஓவியர்கள், தங்கள் ஓவிய நிறுவனத்தின் பெயரையும் ரொம்ப வித்தியாசமாக கற்பனைத்திறனோடு அனைவரையும் கவரும் வண்ணம் எழுதி வைத்திருப்பார்கள். ஓவிய நிறுவனத்தின் பெயர்ப்பலகையில் உள்ள படத்தின் அழகிலேயே அந்த ஓவியரின் திறமை தெரிந்து விடும்.

அடுத்ததாக, ரேடியோ விளம்பரம். ரேடியோ விளம்பரங்கள். பெரும்பாலும் பாடல்களாகவும் உரையாடல்களாகவும் இருந்தன. ரேடியோ விளம்பரங்களில் இருவர் பேசுவதை நாம் கேட்கும் போது, அந்தக் காட்சி நம்முன்னே வர வேண்டும், அதற்கு மிகவும் கவனமாக ரேடியோ விளம்பரங்களை எடுத்து இருப்பார்கள்.

டாடா டில்டிங் வெட்கிரைண்டர்னு ஒரு பாட்டு வரும்... நல்லாயிருக்கும் கேட்க...

வேலைய விட்டு மட்டும் நிக்காதடி முனியம்மா, இன்னைக்கே அஞ்சு பாக்கெட் வீனஸ் க்ளீனிங் பவுடர் வாங்கித் தாரேனு ஒரு விளம்பரம்...

இப்படியாக விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கும்... ஆனாலும் ரேடியோக்கள் எல்லார் வீட்டிலும் இருக்கக் கூடிய ஒரு மலிவான பொருள் அல்ல... ட்ரான்சிஸ்டர் வந்த பிறகு பெருமளவில் ரேடியோ விளம்பரங்களும் வர ஆரம்பித்தன.


அடுத்ததாக, மிக முக்கியமான சினிமா விளம்பரம்.

ஒரு புதிய படம் வெளி வருகிறது என்றால், போஸ்டர்கள் பொது இடங்களில் ஒட்டப்படும். பின்பு படம் வெளிவருவதற்கு இரு வாரத்திற்கோ அல்லது ஒரு வாரத்திற்கோ முன்பிருந்தே நாள் தோறும் மாலையில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு பெரிய ட்ரை சைக்கிளில் இரு பக்கமும் பெரிய சினிமா பதாகையை வைத்து சினிமா தியேட்டரைச் சுற்றி உள்ள எல்லா பகுதிகளிலும் மக்கள் பார்க்கும் படி ஊர்வலமாக வருவார்கள். 

டிரை சைக்கிளின் பின்னால் ஒருவர் சிறிய சினிமா நோட்டிசை மக்களுக்கு கொடுத்துக் கொண்டு வருவார். ட்ரை சைக்கிளின் முன்னால் கரகாட்டம் ஆடி இரு பெண்கள் நடந்து வருவார்கள். தெரு முக்கில் கரகாட்ட மேளம் கேட்டவுடனே சிறுவர்கள் ஓடிச்சென்று அவர்கள் கூடவே ஆடி வருவார்கள். (நானும் அப்ப சிறுவனாகத்தான் இருந்தேன் :-)) இப்படி ஒரு வகையான சினிமா விளம்பரம் செய்யப்பட்டு வந்திருக்கிறது.  இந்தக் கரகாட்டம் பார்ப்பதற்காகவே எல்லாரும் வீட்டு வாசலில் காத்திருப்பார்கள்.

படம் நூறு நாள் ஓடி விட்டது என்றாலும் இதே போன்ற விளம்பரங்கள் தொடரும். ரசிகர் மன்றங்களின் சார்பாக நூறாவது நாளன்று டிக்கெட் கவுண்டரில் மிட்டாய் வழங்கப்படும். (ஆரஞ்சு மிட்டாய் அல்லது எக்லேர்ஸ் சாக்லேட்) இன்றே இப்படம் கடைசி என்றாலும் போஸ்டர்கள் ஒட்டப்படம். 

பின்பு தொலைக்காட்சி வந்த பிறகு அந்த ஆண்டெனாவை சரியான திசையில் வைத்து புள்ளிகளும் கோடுகளும் இல்லாமல் டிவி பார்த்திடுவதே ஒரு பெரும் சாதனையா செயல். காற்று கொஞ்சம் பலமா அடிச்சதுனா போச்சு, மறுபடி ஆண்டெனாவை சரி செய்ய வேண்டும். தூர்தர்சன் என்ற தொலைக்காட்சி வந்த பிறகு விசுவலான விளம்பரங்கள் பெருமளவில் வர ஆரம்பித்தன... பெரும்பாலும் ஹிந்தி விளம்பரங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. நேரடித் தமிழ் விளம்பரங்கள் குறைவாகவே வந்தன.

சில மனதுக்குப் பிடித்த விளம்பரங்கள்:

வளரும் பையன் இவன் உயர உயரவே வளருபவன் - ஐ ஆம எ காம்ப்ளான் பாய்



சொட்டு நீலம் டோய் ரீகல் சொட்டு நீலம் டோய்
எதோ ஒரு சன் ஃப்ளவர் ஆயில் ( பெரிய பூரியும் பெரிய உளுந்த வடையும் காட்டும் போது செமயா இருக்கும்)
போயிந்தே போயே போச்சு இட்ஸ் கான் - அமிர்தாஞ்சன்



ரேமண்ட் சூட்டிங்ஸ் விளம்பரம் (இன்னமும் அதே இசை இந்த விளம்பரத்திற்கு)
சாலிடேர் டிவி
டைனோரா டிவி
ஒனிடா டிவி - அந்த மொட்ட மண்டையன பார்த்தா பயமா இருக்கும்
பூஸ்ட் இஸ் தி சீக்ரெட் ஆஃப் மை எனர்ஜி - கபில்தேவ்
கோல்ட் ஸ்பாட் - சிங் திங்



சிட்ரா சூப்பர் கூலர்
நிர்மா வாஷிங் பவுடர் நிர்மா




இப்படியாக விளம்பரங்கள் பல வகையாய் வந்திருக்கின்றன. இப்பொழுது தொழில்நுட்ப புரட்சி மற்றும் ஊடங்களின் உதவியால் விளம்பரம் ஒரு பெருந்தொழிலாக மாறியிருக்கிறது. பெரிய அளவில், பெரும் பொருட்செலவில் இப்பொழுது விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. பொருட்களை மக்கள் வாங்கத் தூண்டும் வகையில் அழகாய் காட்சிப் படுத்துகிறார்கள். விஷுவலான விளம்பரங்கள் ஒரு சில விநாடிக்குள் தாங்கள் சொல்ல வேண்டியதை, தங்களின் பொருட்களைப் பற்றிய பயனை மக்களிடம் சேர்க்க வேண்டும். சில விளம்பரங்கள குறைந்த கால நேரத்தில் மிகச் சரியாகப் பயன்படுத்தி தாங்கள் சொல்ல வேண்டிய கருத்தைச் சொல்லி விடுகின்றன.வெகு சில விளம்பரங்கள் முகம் சுளிக்க வைத்தாலும் பெரும்பாலும் விளம்பரங்கள் ரசிக்கத் தகுந்த வகையில் உள்ளன. 



இதுவரை படித்த அனைவருக்கும் நன்றி.

தங்கள் கருத்தையும் நீங்கள் ரசித்த விளம்பரங்களையும் சொல்லலாமே :-)

(நன்றி படங்கள் அனைத்தும் இணையத்திலிருந்து)

நன்றி.

நீ வருவாய்! நீ வருவாய்!


நீ வருவாய்! நீ வருவாய்!



நீ வருவாய்! நீ வருவாய்!
------------------------------------

காலை - உன் வருகையின் முன்னறிவிப்பாய்
சாலை கழுவப்பட்டிருக்கிறது
மதியம் மந்தமாகி உன்
அருகாமை உறுதியானது
மாலையில் குளிர் தென்றல்
மெல்ல சன்னல் நுழைய….
இதழ் பிரிக்காமல் ஒரு 
இன்பச் சிரிப்பு மனதிற்குள்


மீண்டும் உனைக் காணப் போகிறேன்... 
ஆண்டில் ஒரு முறையே உன் வருகை
ஆவலோடு காத்திருக்கிறேன் நான்….
குளிர்காலத்தை தொடங்கி வைக்க
வா மழையே வா….
மகிழ்ந்தே என் மகளுக்கு
உனை நான் காட்ட….

http://balaphotoblog.blogspot.com/2011/08/sun-rays.html

அந்த சுவை........


அந்த சுவை........




ஹாலந்து சால்ட்
பிலிப்பைன்ஸ் பனானா
பாகிஸ்தானி பாசுமதி
சிங்கப்பூர் சுகர்
சவூதி எக்
ஒமானி டேட்ஸ்
தைவான் டூனா ஃபிஷ்
ஆஸ்திரேலியன் மட்டன்
சவூதி சிக்கன்
யுகே சாக்லேட்
சிரியன் ஆலிவ்ஸ்
சவுத் ஆஃப்ரிக்கன் ஆரஞ்சு
ஹாலந்து கேப்ஸிகம்
ஆஸ்திரேலியன் பொட்டேட்டோ
இந்தியன் டொமேட்டோ
யுஏஇ மில்க்

சுத்தமாக பக்குவமாக
அழகழகாய் அடைக்கப்பட்ட
பல நாட்டு விளைச்சல்
பாக்கெட்டுகளாக என்னைச் சுற்றி

செய்யலாம் இன்றும் ஒரு
சுகாதாரமான சமையல்
ஆஹா, வாழலாம் நடு
சஹாராவிலும் வாழ்க்கை


எதிர்பாராமல் ஏங்கிப் போனேன்
அந்த ஒரு சுவைக்காக...

அது
அம்மா ஆசையாய்
கலந்து கொடுக்கும் கஞ்சியும்
அரைத்து வைக்கும் துவையலும்....



கோழி

கோழி


வெறுங்கையில் தொடும் போது
ஏதோ போல் இருந்தது
மசாலவுடன் வேக வைத்த பிறகு 
மணம் அருமையாக இருக்கிறது

சுவையாகத்தான் இருக்கிறாய்
நேற்றுவரை உயிரோடிருந்த கோழியே!